முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி நம்முன் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக,தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி,வின்செண்ட் எம்.பி. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். வக்கீல் இன்பதுரை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். தவெக பொதுச்செயலாளர் எஸ்.ஆனந்த், திராவிட கழக தலைவர் வீரமணி சுமார் 53 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
* தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் அபாயமான செயல். நமக்குள் எந்த கருத்து வேறுபாடும் இருக்கக்கூடாது என விரும்புகிறேன்.
*தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி நம்முன் தொங்கிக் கொண்டிருக்கிறது. உரிமைப் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதை உணர்த்தவே அனைத்துக் கட்சி கூட்டம்.
* மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
* மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும்.
* தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டு வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ள மாநிலங்களுக்கு தண்டனையாக அமையும். 2-வது முறைப்படி, தொகுதிகளை உயர்த்தினாலும் தமிழ்நாட்டிற்கு 22க்கு பதிலாக 10 தான் கிடைக்கும்.
* தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே பாதிப்பு.
* தமிழ்நாடு எதிர்கொள்ளும் இந்த முக்கியமான பிரச்சினைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
* மக்கள்தொகை அடிப்படையிலான மறுசீரமைப்பை மேலும் 30 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு தற்போது உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையே நீடிக்க வேண்டும் என மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.






