சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியா? - டி.டி.வி.தினகரன் பதில்


சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியா? - டி.டி.வி.தினகரன் பதில்
x

அ.ம.மு.க. இடம்பெறும் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை சந்தித்தாலும், அந்த கட்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூட்டணி தொடர்பான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில், மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டு வரவேற்பு பதாகையில் டி.டி.வி.தினகரன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இதனால் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சென்னையில் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், “பதாகையில் எனது புகைப்படத்தை யாரோ ஆர்வத்தில் வைத்திருக்கிறார்கள். இது குறித்து வைத்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். அ.ம.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை உரிய நேரத்தில் உரியவர்கள் அறிவிப்பார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனவே நிச்சயமாக கூட்டணி ஆட்சிதான் வரும். அ.ம.மு.க. இடம்பெறும் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

கூட்டணிக்கு நான் தலைமை தாங்கினால் நான் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன். ஆனால் இன்னொரு கூட்டணியில் நான் சேர்கின்றபோது அந்த கூட்டணிக்கு தலைமை தாங்குபவர்கள் அதை வெளிப்படையாக அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story