இரவில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் மக்கள்

சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
சென்னை,
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு, காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புதிய ஆடைகளை உடுத்தி, இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டு, வாழ்த்துகளை பரிமாறி கொண்டு, மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதேபோன்று, தீபாவளியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருச்சியில் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்வதுடன், ஊரில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். சிலர் திரையரங்குகளுக்கு ஒன்றாக சென்று புதிய படங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை ஒரு மணிநேரமும், இரவில் ஒரு மணிநேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி உள்ளது. இதன்படி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். தீபங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகையில் வடக்கே அகல் விளக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழலில், தமிழகத்தில் வானை வண்ணமயம் ஆக்கும் பட்டாசுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
சிறுவர் சிறுமிகள் மற்றும் பெண்கள் கம்பி மத்தாப்புகள், புஸ்வாணம் உள்ளிட்டவற்றையும், பெரியவர்கள் வண்ணங்களை வெளியிட கூடிய பெரிய வகை வெடிகளையும் வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். பசுமை பட்டாசுகளை வெடிக்க அரசு கேட்டு கொண்ட சூழலில், வானில் வண்ணங்களை ஒளிர விடும் பட்டாசுகளுக்கு இந்த ஆண்டு மவுசு கூடியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.






