தமிழகத்தில் அமித்ஷா 'சைலெண்ட்' ஆபரேஷன் செய்யப்போகிறார் - நயினார் நாகேந்திரன்

தி.மு.க.வுக்கு ஷா என்ற பெயரை கேட்டாலே ஷாக் அடிக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மதுரைக்கு வருகை தந்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்பட பல்வேறு பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது;-
"சூரியன் நம்மை சுட்டெரிக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சிக்காக இங்கு இவ்வளவு பெரிய பந்தல் போடப்பட்டது. ஆனால் அமித்ஷா வந்தவுடன் சூரியனே மறைந்து போய்விட்டது. பஹல்காம் தாக்குதலில் நமது சொந்தங்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பிரதமர் மோடி 'சிந்தூர்' ஆபரேஷனை செய்தார். அதே போல் அமித்ஷா இன்று மதுரை மீனாட்சியம்மனை தரிசித்துவிட்டு தமிழகத்தில் 'சைலெண்ட்' ஆபரேஷன் செய்யப்போகிறார்.
1976-ல் தமிழக கவர்னராக கே.கே.ஷா இருந்தபோது, தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அன்று முதல் தி.மு.க.வுக்கு ஷா என்ற பெயரை கேட்டாலே ஷாக் அடிக்கும். நமது தமிழக முதல்-அமைச்சர், 'யார் அந்த ஷா?' என்று கேட்கிறார். அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வந்தவர் இந்த ஷா. மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வந்தவர் இந்த ஷா. டெல்லியில் கெஜ்ரிவாலை தூக்கி எறிந்துவிட்டு பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வந்தவர் இந்த ஷா. அவர்தான் எங்கள் அமித்ஷா.
அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தபோது கூட்டணியை ஏற்படுத்திவிட்டுச் சென்றார். தற்போது மீண்டும் இங்கு வந்துள்ளார். தொடர்ந்து மாதந்தோறும் வர இருக்கிறார். தி.மு.க. பயந்து போய் இருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக ஆட்சி மலர்ந்தே தீரும். சட்டமன்றத்திற்கு நமது எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு போகும் யாத்திரையை நான் நடத்துவேன்."
இவ்வாறு அவர் தெரிவித்தார் .