ஆதிச்சநல்லூர் அகழாய்வு குழிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பழங்கால தொல்லியல் பொருட்கள் சேதம்

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக நடந்த அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கல பொருட்கள் போன்றவை கண்டறியப்பட்டன.
அங்கு மத்திய அரசு சார்பில் ரூ.5 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம், சைட் மியூசியம் அமைக்க கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்கட்டமாக மாதிரி சைட் மியூசியமும் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
அகழாய்வு நடந்த இடங்களில் தென்னை ஓலை கீற்றிலான கொட்டகை அமைத்து இருந்தனர். அதன் மீது தார்ப்பாய் சுற்றி இருந்தனர். அகழாய்வில் கிடந்த பொருட்கள் குறித்து ஆய்வறிக்கை தயாரிக்கும் பணியில் மத்திய தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அகழாய்வு நடந்த இடத்தின் மீது அமைக்கப்பட்ட ஓலைக்கீற்று கொட்டகைகளும் சேதமடைந்த நிலையில் இருந்தன. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குழிகளுக்குள் மழைநீர் புகுந்தது.
அங்கிருந்த பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் சேதமடைந்தன. கீற்றுக்கொட்டகை வழியாக மழைநீர் ஒழுகிய இடங்களில் வாளிகள் வைத்தும் தண்ணீரை அகற்றினர். அகழாய்வு குழிகளுக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் தொல்லியல் துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
எனவே ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






