அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: கோர்ட்டு தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

கோப்புப்படம்
ஐந்தே மாதத்தில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவி புகாரளித்து ஐந்து மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளது. ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் வருகிற ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டும் என்றும் அதுவரை அவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்புக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, ஐந்தே மாதத்தில் அவர் குற்றவாளி என சென்னை மகளிர் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
ஐந்தே மாதத்தில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதித் துறையின் மீதான நம்பிக்கையை பெண்களிடையே அதிகரித்துள்ளதோடு, இதன்மூலம் எதிர்காலத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் வெகுவாக குறையும் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது.
மேலும், குற்றவாளிக்குரிய தண்டனை விவரம் ஜூன் மாதம் இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில், மேற்படி வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை சென்னை மகளிர் கோர்ட்டு வழங்கும் என்ற நம்பிக்கையும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த முக்கியமான வழக்கில் திறம்பட செயல்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






