‘அண்ணாமலை இன்னும் பா.ஜ.க. மாநில தலைவர் என்ற மனநிலையில் இருக்கிறார்’ - திருமாவளவன் சாடல்

சமூக பதற்றத்தை ஏற்படுத்துவதில் அண்ணாமலை குறியாக இருக்கிறார் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
கரூர்,
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. தலா ரூ.50 ஆயிரம் வீதம் 40 குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், த.வெ.க. தலைவர் விஜய் தொடர்பாக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது திருமாவளவன் கூறியதாவது;-
“இல்லாத கட்டுக்கதைகளை பேசுவதே அண்ணாமலையின் வாடிக்கையாக இருக்கிறது. கற்பனையாக பல செய்திகளை அவர் பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் சமூக பதற்றத்தை ஏற்படுத்துவதில் அவர் குறியாக இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் அண்ணாமலை இன்னும் பா.ஜ.க. மாநில தலைவர் என்ற மனநிலையில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார். கரூரில் விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அளவுக்கு என்ன சூழல் இங்கு நிலவுகிறது என்பதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






