தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறு பூங்காவில் நடைபயிற்சி செய்தபோது, அவரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பின்னர் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.க.வை வீழ்த்துவது எங்கள் இலக்கல்ல என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒரே நாளில் 2-வது முறையாக தற்போது முதல்-அமைச்சரை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:-
அரசியல் நிமித்தமாக முதல்-அமைச்சரை சந்திக்கவில்லை. அவரது உடல் நலனை விசாரிக்க மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை. தமிழகத்திற்கு கல்வி நிதி தராததால் மத்திய பா.ஜ.க. அரசு மீது எனக்கு வருத்தம் உள்ளது. அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. தேர்தலில் ஒன்று சேர்ந்துள்ள பா.ஜ.க. - அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள். விஜய்யுடன் நானும் பேசவில்லை; அவரும் என்னுடன் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






