அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை, உள் கட்டமைப்புகள் போன்றவற்றை கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024-25 ஆண்டுக்கான அறிக்கையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக 9,27,185 மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ள நிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 3,61,940, பிற தனியார் பள்ளிகளில் 5,65,243 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளை விட 2 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த 2020 - 21ல் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை 4,15,000 அளவில் இருந்தது. 2024-25ல் 3,60,000 ஆக குறைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் முதலாம் வகுப்பிலான மாணவர் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்த கல்வி ஆண்டில் 208 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த 1,204 பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கூட இல்லாத 311 பள்ளிகள் உள்ளன. தொடக்கக் கல்வியின் நிலை இப்படி உள்ளது.
கொரோனா காலத்தில் பலர் அரசு பள்ளிகளில் சேர்த்தனர். அதன்படி 2022-23ல் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்தது. அப்படி சேர்ந்த மாணவர்கள் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு ஏன் சென்றார்கள்? காரணம் அரசு பள்ளிகளில் போதிய கட்டிட வசதிகள், கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு இல்லாதது, போதுமான ஆசிரியர்கள் இல்லாமை போன்றவைகளால் தான்.
தொடக்கக் கல்வியில் சேர்க்கை குறைவு என்பதும், அதனால் பள்ளிகளை மூடுவது என்பதும் தொடக்க கல்வியை மட்டும் பாதிக்காது. பள்ளி பருவ கல்வியையே பாதிக்கும். இது ஏழை, எளிய பிள்ளைகளின் கல்விக்கு பெரும் சவாலாக அமையும்.
எனவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டு மாணவர்கள் இல்லாத பள்ளிகள், குறைவாக உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகள், பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து கல்வித்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்பச் செய்ய வேண்டும். அதனடிப்படையில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒன்றிணைப்பது, உபரியாக உள்ள ஆசிரியர்களை பற்றாக்குறையுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவது போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அனைத்து உயர் படிப்புகள் மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை சதவீதத்தையும் அரசு அதிகரித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






