பாலியல் வழக்குகள்; பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது - ஐகோர்ட்டு


பாலியல் வழக்குகள்; பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது - ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 20 Jun 2025 1:35 PM IST (Updated: 20 Jun 2025 4:47 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

பாலியல் வன்கொடுமை தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கின் புலன்விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. இதனை கண்ட நீதிபதி, "பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை" என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் எனவும், இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என காவல்துறையினருக்கு டி.ஜி.பி.யும், சென்னை மாநகர காவல் ஆணையரும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை மீறினால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் அதற்கு பொறுப்பாவார்கள் என்றும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்த நீதிபதி, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெண்ணின் விவரங்களை நீக்க வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். அதோடு, ஏற்கனவே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதை சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


1 More update

Next Story