நாய் குறுக்கே வந்ததால் தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ.. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

பள்ளிக்கு தந்தை அழைத்துச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (வயது 33). ஆட்டோ டிரைவரான இவருக்கு ஐஸ்வர்யா (28) என்ற மனைவியும், முகித் (7), ரோகித்(5) என்ற 2 மகன்களும் உள்ளனர். முகித் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.
ரோகித் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். தினந்தோறும் முருகவேல் தனது மகனை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம். அதன்படி நேற்று முருகவேல் தனது மகனை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டார்.
குப்பநத்தம் கிராம சாலையில் சென்றபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே ஓடியது. உடனே முருகவேல் நாய் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்ப முயன்றார். அந்த சமயத்தில் அவருடைய கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏறி கவிழ்ந்தது.
இதில் ரோகித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமின்றி தப்பிய முருகவேல் அவ்வழியாக வந்தவர்கள் உதவியுடன் தனது மகனை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ரோகித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டு முருகவேல் கதறி அழுதார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






