சமூகநீதி விடுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆயிரத்திற்கும் அதிகமான சமூகநீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகவும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வரும் நிலையில், வார இறுதி நாட்களில் உணவை சமைக்க மறுப்பதும், கட்டாயமாக வெளியேறச் சொல்வதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றப்பட்டாலும் மாணவர்களுக்கான உரிமைகள், உதவிகள் மற்றும் சலுகைகள் தடையின்றி கிடைக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்த போதிலும், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைக் கூட முறையாக வழங்க மறுப்பது ஆதிதிராவிடர் நலத்துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

எனவே, தென்மாவட்டங்களில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் சமூக நீதி விடுதிகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு தங்கி கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com