பவானிசாகர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக 100 அடியை எட்டியது

பவானிசாகர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து மிக தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்கிறது. இதனால் அணைகள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நடப்பாண்டில் 2வது முறையாக அணை 100 அடியை எட்டியுள்ளது. 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. நீர்வரத்து 3,500 கனஅடியில் இருந்து 11,667 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 28.79 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






