சென்னை: அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வந்த மிரட்டலில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீவிர சோதனை நடத்தினர்.சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






