30 பவுன் நகை-பணத்துடன் மாயமான மணப்பெண் தஞ்சாவூரில் மீட்பு

30 பவுன் நகை-பணத்துடன் மாயமான மணப்பெண் தஞ்சாவூரில் மீட்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்
நாகர்கோவில் வடசேரி வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் மிருதுளா குமார் (வயது 53), லாரி டிரைவர். இவரது மகள் ஆரதி (23), பி.காம் பட்டதாரி. இவருக்கு வருகிற 4-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சம்பவத்தன்று பெற்றோர் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றிருந்தனர். வீட்டில் ஆரதி மட்டும் இருந்தார். வெளியே சென்ற மிருதுளா குமார் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டிலிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்துடன் ஆரதி மாயமாகி இருந்தார்.
இது குறித்து மிருதுளா குமார் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆரதி தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தான் தஞ்சாவூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறினார்.இதையடுத்து பெற்றோர் வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மகளை அழைத்து வருவதற்காக ஆரதியின் பெற்றோர் தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவரை மீட்டு அழைத்து வந்தால்தான் வீட்டிலிருந்து எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரிய வரும்.






