தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு
தமிழக பட்ஜெட் 2025-26 -ல் வெளியாகும் அறிவிப்புகளை உடனுக்கு உடன் இங்கே அறிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 March 2025 11:11 AM IST
சென்னைக்கு 950 புதிய மின்சார பேருந்துகள்
பெருநகரங்களில் காணப்படும் காற்று மாசுபாட்டினைக் குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னை மாநகரத்திற்கு 950 மின் பேருந்துகள், கோயம்புத்தூர் மாநகரத்திற்கு 75 மின் பேருந்துகள். மதுரை மாநகரத்திற்கு 100 மின் பேருந்துகள் மொத்தம் 1125 மின் பேருந்துகள் உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
- 14 March 2025 11:04 AM IST
வெள்ள நீரை சேமிக்கும் வகையில் கோவளத்தில் ரூ.350 கோடியில் நீர் தேக்கம்; சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க திருப்போரூர் அருகே புதிய நீர்தேக்கம் உருவாக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:54 AM IST
தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படும். ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:48 AM IST
பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டு
44வது செஸ் ஒலிம்பியாட்-2022, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள்-2023, தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை-2023 போன்ற பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு அரசால் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.
இன்று உலக அரங்கில் சதுரங்க விளையாட்டின் தலைநகராகத் தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை இரண்டு உலக சாம்பியன்கள் மற்றும் 31 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ் மண்ணிலிருந்து உருவாகியுள்ளனர். இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டும். மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டை ஊக்குவித்து பல சாம்பியன்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையிலும், பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டினைச் சேர்த்திடும் விதமாக, உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும்- தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:37 AM IST
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி ஒதுக்கீடு!
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், இளைய தலைமுறையினருக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கோடு, சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும். இம்மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப்புலங்கள் மட்டுமன்றி, விண்வெளி, வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகளும் இடம்பெற்றிருக்கும்.
குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள், ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் வானவியல் நகர்வுகளை ஆழ்ந்து உணரக்கூடிய டிஜிட்டல் திரை அனுபவ அரங்குகள். அறிவியல் மாநாட்டுக் கூடங்கள், பார்வையாளர்களுக்கான பசுமைப் புல்வெளிகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட சென்னை அறிவியல் மையம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படும். பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திசையன் விளை, காங்கேயம், மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது- தங்கம் தென்னரசு அறிவிப்பு
- 14 March 2025 10:21 AM IST
ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் ஒருபோதும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்- தங்கம் தென்னரசு
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம்', மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
நெருக்கடியான இந்தச் சூழலிலும், இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியினை இழந்தாலும் கொள்கையினை விட்டுத்தர மாட்டோம். இருமொழிக் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, தமிழ்நாட்டின் தன்மானம் காத்த முதலமைச்சர் அவர்களின் பின் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அணிவகுத்துள்ளனர். எத்தனை தடைகள் எதிர்வரினும் மன உறுதியோடு நம்மை வழிநடத்தும் முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாய் திரண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் வைர வரிகளை நினைவு கூற விழைகிறேன்.
தமிழர்க்குத் தொண்டு செய்யும்
தமிழனுக்குத் தடை செய்யும்
நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்."
- 14 March 2025 10:20 AM IST
மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்- தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:15 AM IST
மகளிர் விடியல் பயணம்: ரூ.3,600 கோடி ஒதுக்கீடு
மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்' மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது. இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.










