அரசு நிலத்தில் கோவில் இருப்பதாகக் கூறி அரசே கோவிலை இடிக்கலாமா? - எச்.ராஜா கேள்வி

தங்கம் முதல் காணிக்கை பணம் வரை அரசு எடுத்துக் கொள்ளும் போது அரசு நிலம் என கூறி கோவிலை இடிக்கலாமா? என எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாப்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் செல்வ முத்துக்குமார சாமி திருக்கோவில் அரசு பொறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து இந்து விரோத திமுக அரசு அக்கோவிலை இடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களையும், அதன் நிலங்களையும், அக்கோவிலுக்கு பக்தர்கள் அளித்துள்ள தங்கம் முதல் காணிக்கை பணம் வரை அக்கோவிலுக்கு வரும் வருமானம் வரை அனைத்தையும் அரசு எடுத்துக் கொள்ளும் போது... அரசு நிலத்தில் கோவில் இருப்பதாகக் கூறி அரசே கோயிலை இடிக்கலாமா?
மேலும் அக்கோவிலை காப்பாற்றச் சென்று போராடிய இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியமையும், இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள், ராக்கியாப்பட்டி ஊர் பொதுமக்களை பலவந்தமாக கைது செய்த மனிதத்தன்மையற்று நடந்துகொண்ட காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்து கோவில்களை இடிப்பதிலும், இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பதிலும் திமுக அரசு காட்டுகிற அக்கறை என்பது இந்து இன அழிப்பின் முன்னோட்டமே..!!
இந்து விரோத திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விநாசகாலே விபரீத புத்தி என்பது திமுக விஷயத்தில் நடந்தே தீரும்..!! காலமும், கர்மாவும் திமுகவுக்கு தக்க பாடத்தை நிச்சயம் கற்றுத்தரும்..!!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






