உசிலம்பட்டி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் - மதுரையில் பரபரப்பு

காரில் இருந்த பள்ளி மாணவர்கள் உடனடியாக இறங்கி தப்பி ஓடியதால் உயிர் தப்பினர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியை சேர்ந்தவர் காசிப்பாண்டி. இவர் தனது காரில் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று பள்ளி முடிந்ததும் கட்டக்கருப்பன்பட்டியில் மாணவர்களை இறக்கி விட்டார். பின்னர் 6 மாணவ-மாணவிகளுடன் பொட்டுலுப்பட்டிக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது போலிபட்டி அருகில் மதுரை-போடி ரெயில்வே பாலத்தின் அடியில் வந்த காரில் திடீரென கரும்புகை வந்தது. உடனே அவர் காரை நிறுத்தினார். காரில் இருந்த மாணவ-மாணவிகளும், டிரைவரும் இறங்கி வெளியே ஓடினார்கள். அப்போது கண் இமைக்கும் நேரத்திலேயே கார் பற்றி எரிந்தது. தீ பிளம்பாக காட்சியளித்தது.
இது குறித்து தகவலறிந்து உசிலம்பட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஜீவா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக மாறியது, இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






