அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு


அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 27 Nov 2025 7:43 PM IST (Updated: 28 Nov 2025 4:28 PM IST)
t-max-icont-min-icon

ரோடு ஷோக்களுக்கு அனுமதி பெறுவது தேர்வு எழுதி வெற்றி பெறுவது போல் இருக்கிறது என நீதிபதி குறிப்பிட்டார்.

சென்னை,

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க., த.வெ.க. மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தங்கள் கட்சிகளின் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் முன்பு தங்கள் கட்சிகளை தமிழக அரசு கலந்தாலோசிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத வழிபாட்டுத் தளங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இதுபோல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும், கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கும்போது அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.

த.வெ.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூட்டங்கள், ரோடு ஷோக்களை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும், அங்கு எத்தனை பேர் நிற்கலாம், எத்தனை பேர் உட்காரலாம் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதில் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, அனைத்து கட்சிகளையும் கலந்து ஆலோசித்த பிறகுதான் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டங்கள், ரோடு ஷோக்களை நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்து இணையத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பார்க்கும்போது, ரோடு ஷோக்களுக்கு அனுமதி பெறுவது தேர்வு எழுதி வெற்றி பெறுவது போல் இருக்கிறது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவும் அடிப்படை உரிமைகளை மீறக்கூடிய வகையில் இருப்பதாக கூறி வழக்கு தொடரக்கூடிய நிலையில் உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

1 More update

Next Story