கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - ஜி.கே.வாசன்

மின்சாரம் துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஈரோடு,
ஈரோட்டில், த.மா.கா. சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கரூரில் நேற்று முன்தினம் நடந்த விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அப்பாவி பொதுமக்கள், பெரியவர்கள், குழந்தைகள் இறந்தது வருத்தம் அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களை காப்பாற்ற உயர்வகை சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த சம்பவம் எப்படி நடந்தது? ஏன் நடந்தது? நடக்க என்ன காரணம்? போன்றவற்றை விளக்க வேண்டியது தமிழக அரசு, காவல்துறையின் கடமை ஆகும். பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் பல சந்தேகங்களுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.
பொதுக்கூட்டத்துக்கு அரசு செய்த முன்எச்சரிக்கை நடவடிக்கை என்ன? என்பதை அரசு விளக்க வேண்டும். நேர்மையான, நடுநிலையான விசாரணை இருக்க வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆம்புலன்ஸ் வந்ததில் தவறு இல்லை.
விஜய் பிரசாரம் கோட்பாடுகளுக்கு உட்பட்டு தான் நடந்ததா? எந்த இடத்தில் தவறு ஆரம்பித்தது? என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஜ. விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்படுவதில்லை. இதில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாரையும் குறிவைத்து அரசியல் செய்யதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






