சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் புதிய குற்றப்பிரிவுகளை சேர்க்க சி.பி.ஐ. மனு - கோர்ட்டு அனுமதி

உயிர்போகும் அளவிற்கு உடல் ரீதியாக துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளை சேர்க்க சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் புதிய குற்றப்பிரிவுகளை சேர்க்க சி.பி.ஐ. மனு - கோர்ட்டு அனுமதி
Published on

மதுரை,

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின்போது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சில குற்றப்பிரிவுகள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ளதாகவும், அந்த குற்றப்பிரிவுகளை சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக தந்தை, மகன் இருவரையும் உயிர்போகும் அளவிற்கு உடல் ரீதியாக துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளை சேர்க்க சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com