சந்திரயான்-4, சந்திரயான்-5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் - இஸ்ரோ தலைவர் தகவல்

கோப்புப்படம்
சந்திரயான்-4, சந்திரயான்-5 திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.
இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான்-4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக களம் இறங்கியுள்ளது. நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான்-4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ரூ.2 ஆயிரத்து 104 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
சந்திரயான்-4 திட்டத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் கருவிகள் இரண்டு தொகுப்புகளாக எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ஆகிய 2 ராக்கெட்டுகள் மூலம் தனித்தனியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளன. சந்திரயான்-5 திட்டம் ஜப்பான் நாட்டுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த இருக்கும் ‘சந்திரயான்-4,' மற்றும் ‘சந்திரயான்-5' ஆகிய 2 திட்டங்களுக்கும் மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
2028-ம் ஆண்டிற்கான 2 முக்கிய நிலவு பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை, விவசாயம் மற்றும் தேசிய மேம்பாட்டுத் துறைகளில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை இஸ்ரோ தொடர்ந்து விரிவுபடுத்துகிறது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியதாவது:-
சந்திரயான்-4 மற்றும் சந்திரயான்-5 ஆகிய 2 திட்டங்களுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனை 2028-ம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் பேரிடர் தொடர்பான பயன்பாட்டு பகுதிகள் விண்வெளி நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மையமாக உள்ளன. குறிப்பாக பேரிடர் எச்சரிக்கை மற்றும் தணிப்பு என்பது நாங்கள் பணியாற்றி வரும் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும்.
இந்திய அரசின் வேளாண்துறை மற்றும் பல்வேறு விவசாய பல்கலைக்கழகங்களுடன் இஸ்ரோ இணைந்து விரிவாக ஒத்துழைத்து பணியாற்றி வருகிறது. குறிப்பாக விண்வெளி சார்ந்த கருவிகள் மூலம் விவசாய விளைச்சல்களை மேம்படுத்துவதில் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
விவசாயம் முக்கியமான துறையாக இருப்பதால் மகசூல் முன்னறிவிப்பு எங்கள் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும். குறைந்தது 9 பயிர்களின் மகசூல் முன்னறிவிப்பை செய்கிறோம். இஸ்ரோ தொடர்ந்து வெள்ளம், சேத முறைகளை கண்காணித்து முன்கூட்டியே முன்னறிவிப்பு எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






