விண்வெளி, அணுசக்தித் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி - இந்திய கம்யூ. கட்சி கண்டனம்

விண்வெளி, அணுசக்தித் துறையை தனியார் மயமாக்குவது நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு, தனியார் மயமாக்கல் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுத்த லாபம் பெறுவதற்கு ஆதரவாகவே அமைந்து வருகிறது. இந்த வகையில், தற்போது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவையும் தனியார் மயமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான இஸ்ரோ மாபெரும் சாதனைகளை படைத்துள்ளது. ஆர்யபட்டாவில் தொடங்கி கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உலகம் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்து, நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத் திறனை பறைசாற்றி வருகின்றது. பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகளின், தனியார் நிறுவனங்களின் விண்கலங்கள் இஸ்ரோ மூலம் ஏவப்படுகின்றன. இது இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப சாதனை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதை காட்டுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ஸ்கை ரூட் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மோடி அரசு செயல்படுவது கவலை அளிக்கிறது. அணுசக்தித் துறை, பாதுகாப்புத்துறை போன்றவற்றையும் மோடி அரசு தனியார் மயமாக்கி வருகிறது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், நாடாளுமன்ற உரிமைகளுக்கும் முரணானது. இத்தகைய தனியார் மயமாக்கல் கொள்கை நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக அமையும்.

மோடி அரசின் இத்தகைய தேச விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இஸ்ரோ தனியார் மயமாக்கல் நடவடிக்கையையும், தனியார் விண்வெளி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதையும் உடனடியாக கைவிட வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com