‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் முப்படைகளுக்கும் மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்தது - ராணுவ தளபதி பேச்சு

Image Courtesy : PTI
பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம் என உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவரும் சூழ்நிலையில், அந்த தாக்குதல் நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி முதல் முறையாக பொதுவெளி நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மையமான ‘அக்னி சோத்' தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி இதுபற்றி பேசியுள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
“ஏப்ரல் மாதம் 22-ந் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு மறுநாளே இதுதொடர்பாக விவாதிக்க சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டது. அதில் முப்படை தளபதிகளும், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் பங்கேற்றோம். கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் ஏதாவது கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்.
அவ்வாறு பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதுதொடர்பாக முடிவெடுக்கவும் அரசிடம் இருந்து எங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது. அவ்வாறு கிடைத்ததனால்தான் நம்முடைய ராணுவ தளபதிகள் முழுசுதந்திரமாக விருப்பப்படி செயலாற்ற முடிந்தது.
இந்த சந்திப்புக்கு 2 நாட்களுக்கு பின்னர், பயங்கரவாதிகளுடைய இலக்குகளை எவ்வாறு தாக்குவது? என்பது பற்றி பெரிய திட்டம் வகுக்கப்பட்டது. நாங்கள் வடக்கு கட்டளைப்பகுதியை ஏப்ரல் மாதம் 25-ந் தேதி பார்வையிட்டு, அதனைத்தொடந்ர்து தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகளை முடிவுசெய்தோம்.
9 இலக்குகளை தாக்க திட்டமிட்டிருந்தோம். அதன்படி, 9 இலக்குகளில் 7 முக்கிய இலக்குகளை முற்றிலுமாக தகர்த்தெறிந்து அழித்தோம். இதில் ஏராளமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் என்ற இந்த சிறிய பெயர்தான் முழு நாட்டையும் இணைத்ததோடு, பதிலடி தாக்குதல் நடவடிக்கையில் உற்சாகத்தையும் கொடுத்தது. ஒட்டுமொத்த நாடும் இந்த விஷயத்தில் ஆதரவாக இருந்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை சதுரங்க விளையாட்டு போல் இருந்தது. அதை ஏன் அப்படி சொல்கிறோம் என்றால், சதுரங்க விளையாட்டில் எப்படி எதிரில் இருப்பவரின் அடுத்தகட்ட நகர்வை அறிந்துகொள்ள முடியாதோ, அதேபோல், நம்முடைய பதிலடி தாக்குதலில் எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? என்பதும் எங்களுக்கு தெரியாத நிலையே இருந்தது.
இதனை சாம்பல் மண்டலம் (கிரே ஜோன்) என்று அழைப்பார்கள். எதிரிகளும் சதுரங்க நகர்வுகளை மேற்கொண்டனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு “செக் மேட்'' வைத்துக்கொண்டே இருந்தோம். “உரி'' மற்றும் “பாலகோட்'' போன்ற முந்தைய பதிலடி தாக்குதலில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
உரி நடவடிக்கையின்போது, ஏவுதளங்களை குறி வைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. அதேபோல், 2019-ம் ஆண்டு பாலகோட் தாக்குதல்களில், பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவி பாகிஸ்தானுக்குள் பயிற்சி முகாம்களைத் தாக்குவது நோக்கமாக இருந்தது.
ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையோ, எதிரி பகுதிக்குள் சற்று ஆழமாக சென்று மையப்பகுதியை துல்லியமாக தாக்குவதே இலக்காக இருந்தது. அதன்படி இந்திய விமானப்படையும் (ஐ.ஏ.எப்.) துல்லியமாக தாக்கியது. இவ்வாறு மையப்பகுதியை தாக்கியது இதுவே முதல்முறை. அந்த தாக்குதல்தான் அவர்களை நிலைக்குலைய செய்தது. இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக கதையை கட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.






