சென்னை: எருமை மாடு மீது மோதிய மின்சார ரெயில்

கோப்புப்படம்
ரெயில் மிகவும் மெதுவாக சென்றதால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.
சென்னை,
காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்களில் ஒன்று, தினமும் பகல் 11.05-மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கு வந்து சேரும். வழக்கமாக செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு 12.10-மணிக்கு வந்துவிட்டு 12.20-க்கு புறப்பட வேண்டிய அந்த ரெயில், நேற்று தாமதமாக 12.30 மணிக்குவந்து சேர்ந்தது.
பின்னர் 12.50 மணிக்கு மேல் புறப்பட்ட ரெ யில் மிகவும் மெதுவாக சென்றதால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையத்தில் என்ஜின் டிரைவரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது என்ஜின் டிரைவர், வாலாஜாபாத் அருகே வரும்போது எருமை மாடு மீது ரெயில் மோதிவிட்டதாகவும், அது என்ஜினீல் சிக்கினால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்பதால் பொறுமையாக இயக்குவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து 2.10 மணிக்கு தாம்பரம் வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் மாற்று ரெயிலில் கடற்கரைக்கு புறப்பட்டு சென்றனர். தாம்பரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட திருமால்பூர் மின்சார ரெயில், சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் தாமதமாக 3.33 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.






