பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
x

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

விஷ்ணு சிலையின் தலை ஒன்று சமூக விரோதக் கும்பலால் உடைக்கப்பட்ட நிலையில், அதனை மீண்டும் சரி செய்ய உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை வைத்தார்.இதற்கு எவ்வாறு தாம் உத்தரவிட முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பிய நிலையில், அதிருப்தி அடைந்த வழக்கறிஞர், தன்னுடைய காலணியை கழற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நீதிமன்ற காவலர்கள், உடனடியாக செயல்பட்டு, அவரிடமிருந்து காலணியைப் பறித்துக்கொண்டு, வழக்கறிஞரை நீதிமன்ற அறைக்கு வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு அறையில் நடந்த இந்த சலசலப்பு அனைத்தையும் கவனித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இதற்கெல்லாம் கவனத்தை சிதறவிடக் கூடாது, நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் என்னை பாதிக்காது என்று கூறிவிட்டு, வழக்கம் போல தன்னுடைய பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட முயன்ற வழக்கறிஞர் யார் என்பது குறித்தும், அவரது தாக்குதல் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில்,

ஜனநாயகத்தின் மிக உயரியதான நீதித்துறை மீதான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல். தாக்குதல் முயற்சிக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பெருந்தன்மையுடன் பதிலளித்தது அவரது நீதித்துறையின் பலத்தை காட்டுகிறது. நமது அமைப்புகளை மதிக்கும், பாதுகாக்கும் முதிர்ச்சியான நடத்தை உள்ள கலாசாரத்தை வளர்க்க வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story