குழந்தைக்கு மதுபானம், சிகரெட் சூடு... வெந்நீரில் முக்கி எடுத்து சித்ரவதையால் பலி; தாய், கள்ளக்காதலனின் வெறிச்செயல்

குழந்தையை பலமுறை கம்பால் தாக்கி, சிகரெட் நெருப்பால் குழந்தைக்கு 10 இடங்களில் சூடு வைத்துள்ளனர்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியை சேர்ந்தவர் சீனு. இவருடைய மனைவி பிரபுஷா (வயது 23). இவர்களுக்கு 2 மகன்கள். பிரபுஷாவின் வீடு அருகே ஓட்டல் நடத்தி வந்தவர் காஞ்சாம்புறத்தை சேர்ந்த சதாம் உசைன் (வயது 32). மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து இவர் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் பிரபுஷாவுக்கும், சதாம் உசைனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த சீனு மனைவியை பிரிந்து சென்றார். அதே சமயத்தில் முதல் குழந்தையை சீனு தன்னுடன் அழைத்து சென்று விட்டார். இளைய மகனான பிறந்து 15 மாதங்களே ஆன அரிஸ்டோ பியூலஸ் என்ற குழந்தையை பிரபுஷா வைத்திருந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் 14-ந்தேதி மயிலாடியில் உள்ள கோழிப்பண்ணையில் 2 பேரும் வேலைக்கு சேர்ந்தனர். அப்போது தாங்கள் கணவன்-மனைவி என்று கூறி, அங்கேயே 2 நாட்கள் தங்கியிருந்தனர். தங்கியிருந்த அறையில் சதாம் உசைனும், பிரபுஷாவும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஆனால் எதுவும் அறியாத குழந்தை அரிஸ்டோ பியூலஸ் அந்த சமயத்தில் பசியால் அழுதுள்ளான். உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால், குழந்தை மீது சதாம் உசைனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. குழந்தை என்றும் பாராமல் கம்பால் பலமுறை தாக்கினார். மேலும் குழந்தையை தூங்க வைப்பதற்காக இருவரும் மதுபானம் கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு சிகரெட் நெருப்பால் குழந்தைக்கு 10 இடங்களில் சூடு வைத்துள்ளனர். அதிலும் உச்சபட்ச கொடுமையாக குழந்தையை வெந்நீரில் முக்கி எடுத்துள்ளனர். இப்படி கொடுமையின் உச்சத்தில் இருந்த குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருந்துள்ளது.
இதனால் கோபமடைந்த சதாம் உசைன் குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார். அதனால் குழந்தைக்கு விலா எலும்பு முறிந்துள்ளது. இந்த கோர சம்பவம் குழந்தையின் தாயான பிரபுஷா கண்முன்னே அரங்கேறியது. எனினும் அவர் கண்டுகொள்ளாமல் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. குழந்தை சித்ரவதை செய்து கொல்லப்பட்டது தெரிய வந்ததும், கள்ளக்காதல் ஜோடி இருவரும் போலீசாரிடம் சிக்கினர். இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சதாம் உசைன், பிரபுஷாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 15 மாத குழந்தையை மதுபானம் குடிக்க வைத்தும், சிகரெட் நெருப்பால் சுட்டும், வெந்நீரில் மூழ்க வைத்து சித்ரவதை செய்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






