கோவையில் கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

கோவையில் ஒரு கல்லூரி பேராசிரியைக்கும், அவரது கணவருக்கும் இடையே அவர்களுடைய குழந்தைகளை பராமரிப்பதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.என்.ஆர். தெருவை சேர்ந்த தனலட்சுமி (வயது 36), கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். தனலட்சுமிக்கும், தனியார் நிறுவன ஊழியரான மணிகண்டன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வெள்ளலூர் கே.ஆர்.கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தனலட்சுமி வீட்டில் இருந்தபோது, திடீரென ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், தனலட்சுமியின் தாயார் நாகரத்தினத்திற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனலட்சுமிக்கும், கணவர் மணிகண்டனுக்கும் இடையே குழந்தைகளை பராமரிப்பது குறித்து பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் காலையும் அவர்கள் இடையே திடீரென்று தகராறு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிய வந்தது. அதன்பிறகு மணிகண்டன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு சென்றார். தனலட்சுமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையே வேலைக்கு சென்ற மணிகண்டன், தனலட்சுமியிடம் செல்போனில் பேச முயன்றார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






