கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - ரகசிய டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை

கோப்புப்படம்
மாணவியின் அறையில் கிடைத்த ரகசிய டைரியை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை, சைவ முத்தையா 1-வது தெருவை சேர்ந்தவர் மத்தாய் (55 வயது), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நர்சாக வேலை பார்க்கிறார். இவர்களது மகள் லிபினா (17 வயது) சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று மாலையில் லிபினா வீடு திரும்பினார். தந்தையும், தாயும் வேலைக்கு சென்றதால் லிபினா வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் தாயார், லிபினாவிற்கு செல்போனில் தொடர்புகொண்டபோது லிபினா அழைப்பை ஏற்கவில்லை.
பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாயார், லிபினா வீட்டின் அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அலறினார். இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் லிபினாவை பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஐஸ்அவுஸ் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் ரகசிய டைரி ஒன்று கிடைத்தாகவும், அதில் லிபினா சில தகவல்களை எழுதியிருந்ததாகவும் தெரிகிறது. அதை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






