'காலனி' பெயர் - சட்டசபையில் காரசார விவாதம்

'காலனி' என்ற சொல் பொது பழக்கத்தில் இருந்து நீக்கி அரசாணை வெளியிடப்பட்டது.
சென்னை,
சாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற வேறுபாடு இல்லாத சம வாய்ப்புகள் கொண்ட சமூக அமைப்பை நோக்கி தமிழக அரசு பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது . அந்த வகையில், 'ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருப்பதால், 'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும் பொது பழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலர் தலைமையில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் சாதி பெயர்களை நீக்குதல், மறு பெயரிடுதல் தொடர்பாக, ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து நீக்கி, அத்துடன், சாலைகள், தெருக்கள் பெயர்களில் உள்ள சாதி பெயர்களும் நீக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில், இன்றைய சட்டசபை கூட்டத்தின் கேள்வி-நேரத்தின்போது 'காலனி' பெயர் தொடர்பாக வானதி சீனிவாசன் - அமைச்சர் மதிவேந்தன் இடையே காரசார விவாதம் நடந்தது.
“காலனி எனும் பெயரை நீக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் சாய்பாபா காலனி , என்ஜிஓ காலனி என உள்ளது. காலனியை அகற்றிவிட்டு எப்படி அழைப்பீர்கள்” என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் அமைச்சர் மதிவேந்தன் பதிலளித்து கூறியதாவது:- “காலனி என்பது பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததால் அப்பெயரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சாய்பாபா காலனி என்ற சொல் அவமதிக்கும் வகையில் இருக்கிறதா? இப்படி பேசி பிரிவினையை நீங்கள் வட மாநிலத்தை போல் இங்கும் பரப்பி விட முடியாது“ என தெரிவித்தார்.






