அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்; கார்த்தி சிதம்பரம் எம்.பி. விருப்பம்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
மதுரை,
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய வாக்காளர்களை சேர்க்கும்போது நன்கு விசாரிக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து தற்காலிகமாக வந்திருப்பவர்களை கண்டிப்பாக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கக்கூடாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சியினரும் அமைச்சரவையில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் கட்சி அதனை முழுமையாக பயன்படுத்தும்.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஆகிய 4 பேர் இணைந்திருப்பது தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவராக பிரிந்து செல்வதும், பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததும் அ.தி.மு.க.விற்கு ஒரு பின்னடைவுதான். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதிலிருந்து நாம் எந்த ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை” என்றார்.






