'டயாலிசிஸ்' பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் - அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்
'டயாலிசிஸ்' பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரும் கோரிக்கையை 4 வாரத்துகள் பரிசீலிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றும் 'டயாலிசிஸ்' பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரும் கோரிக்கையை 4 வாரத்துகள் பரிசீலிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், தென்காசியைச் சேர்ந்த எஸ்.காளிமுத்து, எண்ணூரைச் சேர்ந்த டி.கார்த்திகைதேவி உள்பட 126 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 'டயாலிசிஸ்' பணியாளர்களாக 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்டோம். எங்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகளாக எந்த ஒரு இடைநிறுத்தமும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் மத்தியில் சிறுநீரக பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால், அதிக பணம் கொடுத்து தனியார் மருத்துவமனைகளில் 'டயாலிசிஸ்' செய்ய முடியாத ஏழைகள் அரசு மருத்துவமனைகளுக்குத்தான் வருகின்றனர். அதனால், எங்களது பணி மிகவும் அவசியமாகும். இதனால், இரவும், பகலுமாக நாங்கள் வேலை செய்கிறோம்.
இதனால், ‘டயாலிசிஸ்’ எந்திரங்களை அனுபவம் வாய்ந்த எங்களை போன்ற ஊழியர்களால்தான் இயக்க முடியும். எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்யும்படி கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினோம்.
இதுவரை எந்த பதிலும் இல்லை. மேலும், தற்காலிக ஊழியர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டாலும், முறையான வழியில்தான் நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமாக நாங்கள் நியமிக்கப்படவில்லை. அதனால், வேறு புதிய ஊழியர்களை அரசு நியமித்தால், அது எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிய ‘டயாலிசிஸ்’ பணியாளர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும். எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் அமுதகணேஷ், கோபிநாத், சி.ஆனந்த்ராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பரிசீலித்து 4 வாரத்துக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.






