நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிண்டி கத்திப்பாரா பாலத்தின் மேல் 101 அடி உயரத்தில் கட்டுமான பணிகள்

கிண்டி கத்திப்பாரா பாலத்தின் மேல் 101 அடி உயரத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் மெட்ரோ ரெயில் பாதை கட்டமைப்பு பணிகள் நடந்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிண்டி கத்திப்பாரா பாலத்தின் மேல் 101 அடி உயரத்தில் கட்டுமான பணிகள்
Published on

சென்னையில் 2-ம் கட்டமாக நடந்து வரும் 3 மெட்ரோ வழித்தடங்களில், மாதவரம்-சோழிங்கநல்லுர் இடையே 47 கி.மீ., தூரத்துக்கு 46 ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் மேம்பால பாதைக்காக 320-க்கும் மேற்பட்ட தூண்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ள இடங்களில், மேம்பாலம் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த தடத்தில், கிண்டி கத்திப்பாராவில் இருந்து 1,354 அடி தூரத்துக்கு மேம்பால பாதையில் பிரமாண்டமாக ரெயில் பாதை 101 அடி உயரத்தில் அமைக்கும் பணிகள், முழு வீச்சில் நடந்து வந்தது. கத்திப்பாரா மேம்பாலத்தில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் பாதைக்கும் மேல் இந்த பாதை அமைந்துள்ளது. தரையிலிருந்து 101 அடி உயரத்தில் இந்த மேம்பால பாதை அமைக்கப்பட்டுள்ளது. எதிர் எதிர் திசைகளில் இருந்து சிமெண்டு பெட்டிகள் இணைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்தப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில், கத்திப்பாரா அருகே பட்ரோட்டில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரையில் 1,354 அடி தூரத்துக்கு 410 அடி ஆரத்துடன் கூடிய வளைவு பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

போக்குவரத்தை தடை செய்யாமல் பணிகள் நடந்து வந்ததால் பணிகள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பான முறையிலும் நடந்தது. வழக்கமாக மெட்ரோ ரெயில் மேம்பால பாதையில், கர்டர்' எனப்படும், ராட்சத கான்கிரீட் பாலம் இணைத்து பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், கத்திப்பாராவில் சாலைகள், பாலம், சுரங்கப்பாதை இருப்பதால், அதுபோல் பணிகள் மேற்கொள்ள முடியாது. எனவே, நகர்ப்புறங்களில் சிக்கலான இடங்களில் பயன்படுத்தப்படும் பேலன்ஸ்டு கேண்டிலீவர் முறை' என்ற நவீன தொழில்நுட்பத்தால் சவாலான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இணைக்கப்பட்டுள்ள பாலத்தின் பிற பகுதியிலுள்ள பணிகள் நடந்து வருகிறது.

இந்த பகுதிகளில் எந்த சாலையும் மூடவில்லை. ஏற்கனவே சற்று தூரம் இடைவெளியில் அமைக்கப்பட்ட 6 பிரமாண்டமான தூண்களையும் ஒன்று சேர்க்கும் வகையில், கட்டுமான பணிகள் நடந்தது. ஒரே நேரத்தில் 110 டன் வரை எடையுள்ள கட்டுமான பொருட்களை கொண்டு சென்று, பணிகள் மேற்கொள்ள 'பார்ம் டிராவலர்' என்ற கட்டுமான கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.

உயரமாகவும், வளைவுடனும் அமைந்துள்ளதால், இது சவாலான பணியாக இருந்தது. மிகவும் கவனத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தடத்தில் மெட்ரோ ரெயில் பணிகளை 2027-ம் ஆண்டில் முடித்து, மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளோம். அப்போது, இந்த வழித்தடத்தில் பயணியர் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது, பிரமாண்டமான பயணத்தை பயணிகள் உணருவார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com