தொடர் கனமழை: சென்னை விமான நிலையம் மூடல்
இன்று மாலை 5 மணி வரை சென்னை விமான நிலைய ஓடுபாதை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் அதிகனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் மழை காரணமாக சென்னையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பானம், திருச்சி, தூத்துக்குடி செல்லும் விமானம் உள்ளிட்ட 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புயல் காரணமாக கனமழை கொட்டி வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களை தரையிறக்க முடியாத சூழல் நிலவி வருவதால் இன்று மாலை 5 மணி வரை சென்னை விமான நிலைய ஓடுபாதை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.