முதல் கணவரின் சித்ரவதையை மறக்க முடியவில்லை... கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

கோப்புப்படம்
கோவையில் ஐ.டி. பெண் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் விஜயன் (35 வயது). இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகனபிரியா (34 வயது). இவர்களுக்கு கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. மோகனபிரியாவும் பெங்களூருவில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் கர்ப்பமானதால் பிரசவத்துக்காக கோவை வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதன் காரணமாக மோகனபிரியா வீட்டில் இருந்தே வேலை செய்து வந்தார். மோகனபிரியாவுக்கு விஜயனுடன் நடந்தது 2-வது திருமணம் ஆகும். முதல் கணவர் அவரை அதிகமாக கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதையே நினைத்து அவர், வேதனைப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
ஆனாலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோகனபிரியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மோகனபிரியா உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் மோகனபிரியா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், "எனது முதல் கணவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் நான் சித்ரவதை அனுபவித்தேன். அதில் இருந்து எப்போது மீளுவேன் என்று ஏங்கிக்கொண்டு இருந்தேன். அதுபோலவே அந்த நரகத்தில் இருந்து நான் வெளியே வந்தேன். பிறகு 2-வது திருமணம் செய்து கொண்டேன்.
முதல் கணவர் என்னை கொடுமைப்படுத்தியதற்கு மருந்து போடுவது போன்று எனது 2-வது கணவர் என்னை பாசமாக பார்த்துக் கொண்டார். அவர் என்னை பாசத்தோடு பார்த்துக்கொண்டாலும், முதல் கணவரால் நான் அனுபவித்த சித்ரவதையை மறக்க முடியவில்லை. அதை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை. நான் எனது 2-வது கணவர் மற்றும் குடும்பம், எனது குழந்தையை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் முதல் கணவரிடம் இருந்து பெற்ற சித்ரவதை என் மனதை விட்டு அகலாததால் என்னால் வாழ முடியவில்லை.
எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் அடைந்த சித்ரவதையை நினைக்கும்போது வாழ்வதற்கே பிடிக்கவில்லை. இதனால் தான் நான் இந்த உலகத்தை விட்டே செல்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மோகனபிரியாவுக்கு திருமணமாகி 1¾ ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து சாய்பாபா காலனி போலீஸ் உதவி கமிஷனரும் விசாரணை நடத்தி வருகிறார்.






