கள்ளக்குறிச்சியில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி கைது

கல்வராயன்மலை அடிவாரத்தில் கஞ்சா செடி வளர்த்த தம்பதியை போலீசார் மாறுவேடத்தில் சென்று அதிரடியாக கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள புளியங்கோட்டை கிராம பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்து, விற்பனை செய்யப்பட்டு வருதாக திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் மாலை மாறுவேடத்தில் தகவல் கிடைக்கப் பெற்ற கிராமத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள வயல்களில் கஞ்சா வளர்க்கப்பட்டு வருகிறதா? என அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம் (வயது 78), அவருடைய மனைவி அஞ்சலை (65) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான விளை நிலத்தில் வேலிகள் அமைத்து கஞ்சா செடிகள் வளர்த்து, விற்பனை செய்வது தெரியவந்தது.
உடனே மாறுவேடத்தில் இருந்த போலீசார், ராமலிங்கத்தை நேரில் சந்தித்து கஞ்சா வேண்டும் என கேட்டுள்ளனர். இதையடுத்து அவர், கஞ்சாவை பறித்து கொடுத்துள்ளார். அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்து கண்காணித்த போலீசார் ராமலிங்கம், அவருடைய மனைவி அஞ்சலை ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் வயலில் பயிரிடப்பட்டிருந்த 10 கிலோ எடையிலான கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.






