அரக்கோணத்தில் சைக்கிள் பேரணி: மத்திய மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்


அரக்கோணத்தில் சைக்கிள் பேரணி: மத்திய மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்
x

தொழிற் பாதுகாப்பு படை உதய தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று அரக்கோணம் வந்தார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் ராஜாதித்யன் சோழன் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், தொழிற் பாதுகாப்பு படை உதய தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு இரவு 10.30 மணிக்கு வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்திற்கு சென்று இரவு தங்கினார்.

இன்று காலை 8 மணியளவில் நடைபெறும் உதய தின விழாவில் கலந்து கொண்டு வீரர்கள் அணிவகுப்பை பார்வையிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும், போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடலோர பகுதிகளில் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும் 'பாதுகாப்பான கடற்கரைகள், வளமான இந்தியா' எனும் சைக்கிள் பேரணி மத்திய மந்திரி அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு சென்று அங்கிருந்து பெங்களூரு செல்வார் என கூறப்படுகிறது. அமித்ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூர் சரக டி.ஐ.ஜி. தேவராணி, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

1 More update

Next Story