செயற்குழு கூட்டத்தில் முடிவு: காங்கிரஸ் போட்டியிட 60 தொகுதிகள் தயார்

தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கடந்த 18-ந் தேதி டெல்லிக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கருத்து கேட்டனர். அப்போது, கூட்டணி குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அகில இந்திய தலைமை அறிவுறுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார், 52 செயற்குழு உறுப்பினர்கள், 39 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், தேர்தல் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முக்கியமாக, 60 தொகுதிகளை தேர்வு செய்து தகுதியான வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தயார் செய்யவும் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இந்த 60 தொகுதிகளில் இருந்தே கூட்டணியில் தங்களுக்கான தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






