டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு: மத்திய அரசு பதில்

மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுபிரியா பட்டேல் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்
புதுடெல்லி,
தமிழக காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் மக்களவையில், டெங்கு பாதிப்பு தொடர்பான கேள்விகளை கேட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக டெங்கு அதிகரித்து இருக்கிறதா? இறப்புவீதம் அதிகரித்துள்ளதா? என அவர் கேட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுபிரியா பட்டேல் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில்,
“சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நோய்க்கிருமி, பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம், நாட்டில் டெங்கு போன்ற பரவும் நோய்களைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் செயல்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் ஆகிய காலக்கட்டத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 855 ஆக இருந்த டெங்கு பாதிப்பு, இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 75 ஆயிரத்து 534 ஆக குறைந்துள்ளது. அதேபோல் இறப்பு வீதமும் குறைந்து உள்ளது” என கூறப்பட்டுள்ளது.






