2 நாள் பயணமாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார்

கருணாநிதியின் உருவ சிலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
விழுப்புரம்,
வருகிற 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை முதல்-அமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பாக முகவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
அந்த வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை), விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். திருவண்ணாமலையில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துக்கொண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு காரில் வருகை தரும் அவருக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி, மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதையடுத்து மாலை 5 மணியளவில் செஞ்சி ஊரணித்தாங்கலில் உள்ள சஞ்சனா பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் வரும் அவருக்கு விழுப்புரம்- செஞ்சி சாலையில் துணை பொதுச்செயலாளர் பொன்முடி, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. (மத்தியம்), டாக்டர் பொன்.கவுதமசிகாமணி (தெற்கு) மற்றும் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் அவர் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
அதனைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெறும் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். தொடர்ந்து மாலை 4 மணியளவில் சிந்தாமணியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியின் உருவ சிலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி சூர்யா என்ஜினீயரிங் கல்லூரிக்கு செல்லும் அவர், அங்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதையடுத்து அவர் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.






