பிரதமர் மோடியின் தமிழக பயணத் திட்டம் விவரம் வெளியீடு

வரும் 27-ம் தேதி கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்ய உள்ளார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். இதற்கான பயணத் திட்டம் வெளியாகியுள்ளது. அதில்,
* ஜூலை 26 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அதனைத் தொடர்ந்து, இரவு 8.30 – 9.30 மணிக்கு விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பங்கேற்று, தூத்துக்குடி புது விமான முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
* பின்னர் இரவு 9.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் 26 ஆம் தேதி இரவு திருச்சியில் தங்கவுள்ளார்.
* ஜூலை 27ஆம் தேதி திருச்சி ஹெலிபேடில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, பகல் 12 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அதன்பின் அங்கு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வழிபாடு நடத்துகிறார்.
மேலும், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிடவுள்ளார். அதன்பிறகு பகல் 2.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஜூலை 28ல் பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் தமிழகம் வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களையும் மோடி சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடியும் கூறி வரும் நிலையில் எடப்பாடி மோடி சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.






