தர்மபுரி: சாலை அருகே இறந்து கிடந்த ஆண் ஒட்டகம் - போலீசார் விசாரணை


தர்மபுரி:  சாலை அருகே இறந்து கிடந்த ஆண் ஒட்டகம் - போலீசார் விசாரணை
x

சாலையோரத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த ஒட்டகத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி அருகே அதியமான்கோட்டை - ஓசூர் சாலையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலை பகுதியில் சாலையோரம் ஒரு ஆண் ஒட்டகம் முன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சாலையோரம் கிடந்த ஆண் ஒட்டகம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த ஒட்டகத்தை கிரேன் மூலம் மீட்டு தர்மபுரி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நீர்ச் சத்து குறைவு காரணமாக இந்த ஒட்டகம் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண் ஒட்டகம் தருமபுரி கால்நடை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சாலையோரம் ஆண் ஒட்டகம் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஒட்டகத்தை நேற்று அதிகாலை யாரோ மர்ம ஆசாமிகள் லாரியில் கொண்டு வந்து வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த ஒட்டகத்தை மர்ம ஆசாமிகள் எங்கிருந்து கொண்டு வந்தார்கள். எந்த ஊருக்கு இந்த ஒட்டகத்தை கொண்டு செல்ல முயன்றார்கள் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story