வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்


வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்  - சீமான்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 July 2025 9:30 PM IST (Updated: 23 July 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை மிரட்டும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளர்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள சுமார் 80 கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற்று, கடந்த 20-7-2025 அன்று வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்புக் காரணமாக வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராமல் இழுத்தடித்த நிலையில், ஆனைமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மூலம் நேரடியாக அனுமதிப்பெற்றுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் காழ்ப்புணர்ச்சிகொண்ட காவல் ஆய்வாளர் ஆனந்தன் வேண்டுமென்றே நாம் தமிழர் கட்சியினரை மிரட்டும் பணியில் ஈடுபட்டார்.

மேலும், நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்த அதே நேரத்தில், அதே இடத்தில் வேண்டுமென்றே, இந்து முன்னணியின் ஊர்வலத்திற்கும் அனுமதியளித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைச் சிதறடிக்கும் செயலில் வால்பாறை காவல்துறை ஈடுபட்டது. காவல்துறையினரின் இத்தகைய எதேச்சதிகாரச் செயலினை நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நிகழ்விடத்திலேயே கண்டித்து உரையாற்றினர்.

நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குத் தொடுக்க எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், அவர்களைக் காவல் நிலையம் வரவழைத்து அடித்துத் துன்புறுத்தி அடிபணியவைக்கும் நோக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு காவல்துறையின் அடாவடிச்செயல் சட்டத்திற்குப் புறம்பானதாகும். தமிழ்நாட்டு காவல்துறையின் பெயர் ஏற்கனவே இந்திய அளவில் சீர்கெட்டுப்போயுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கைச் சீர் செய்வதற்குப் பதிலாக இதுபோன்ற முறைகேடான அத்துமீறலில் ஈடுபடுவது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

ஆகவே, மக்கள் நலன் காக்கும் நாம் தமிழர் கட்சியின் அறப்போராட்டத்தை முடக்கி, சட்டத்திற்குப் புறம்பாகப் பொறுப்பாளர்களை மிரட்டும் செயலில் ஈடுபடும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story