அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆவார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இதில் சட்டவிரோத பணப்பரிவரத்தனை நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால் வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரின் மனைவி, சகோதரர்கள் யாரும் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகவில்லை. அமைச்சரின் 3 மகன்களில் ஒருவரான மகேஸ்வரன் மட்டுமே ஆஜரானார். இதையடுத்து, வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட கோர்ட்டு உத்தவிட்டது.






