சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்களில் இன்று 63 ஆயிரம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை தீபாவளி என்பதாலும் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இன்று சொந்த ஊர்களுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர். ரெயில்கள், அரசு, தனியார் பஸ்கள், கார்கள், பைக்குகள் என பல்வேறு வாகனங்களில் மக்கள் சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்களில் இன்று ஒரேநாளில் 63 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலில்,
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்களில் இன்று 1,810 பஸ்களில் 63 ஆயிரத்து 683 பேர் பயணம் செய்துள்ளனர். அதேவேளை, நாளை பயணம் செய்ய தற்போதுவரை 1,180 பஸ்களில் 47 ஆயிரத்து 610 பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்னதாக நேற்று 1,383 பஸ்களில் 47 ஆயிரத்து 610 பேர் பயணம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






