அதிமுக ஆட்சியில் வந்த திட்டங்களை திமுக ரத்து செய்தது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


அதிமுக ஆட்சியில் வந்த திட்டங்களை திமுக ரத்து செய்தது:  எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x

தி.மு.க. அரசு ரத்து செய்த திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மீண்டும் தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்,

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த அவர், நத்தம் பஸ் நிலையம் அருகே 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசார வாகனத்தில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பது இங்கு கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தை பார்க்கும் போது பிரகாசமாக தெரிகிறது. இந்த கூட்டம் கூடுவதற்கு முன்பாக வருணபகவான் மழையை கொடுத்து நம்மை வரவேற்றார். இந்த பகுதி வேளாண்மையும், தொழில் வளர்ச்சியும் நிறைந்த பகுதியாகும். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக மும்முனை மின்சாரம் வழங்கிய அரசு அ.தி.மு.க. தான். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் தான் நிறைவேற்றி இருக்கின்றனர்.

தற்போது ரத்து செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மீண்டும் தொடரும். மேலும் திருமண உதவித்தொகையுடன் பட்டு சேலை பட்டு வேட்டி வழங்கப்படும்.பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை சட்டமன்றத்தில் அ.தி.மு.க. கொடுத்த அழுத்தத்தால் தான் வழங்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள். செய்தார்களா?. கல்விகடன் ரத்து செய்யப்படும் என்றார்கள். ரத்து செய்தார்களா? தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.இதில் பெரும்பாலான கடைகளை தி.மு.க.வினர் தான் நடத்தி வருகின்றனர். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். 'பை பை ஸ்டாலின்'இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

1 More update

Next Story