அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை அடியோடு பறித்துள்ளது திமுக அரசு - நயினார் நாகேந்திரன்

கோப்புப்படம்
அரசு நிறுவனங்கள் அனைத்திலும் திமுக அரசு மக்கள் பாதுகாப்பை சிதைத்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு உள்ள லட்சணத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஏற்கனவே, எலிகள், நாய்களை உலவ விட்டு, பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களின் கூடாரமாக மாற்றி அரசு மருத்துவமனைகளைச் சீரழித்தது போதாதென்று, தற்போது ரவுடிகளுக்கு இடையிலான சண்டைக்களமாக மாற்றி, அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை அடியோடு பறித்துள்ளது திமுக அரசு.
இது ஒருபுறமிருக்க பள்ளியில் கொலை, நீதிமன்ற வாயிலில் கொலை, காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு என அரசு நிறுவனங்கள் அத்தனையிலும் தனது துருப்பிடித்த இரும்புக் கரத்தினால் மக்கள் பாதுகாப்பை சிதைத்துள்ளது திமுக அரசு. காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறுவது போல திமுக அரசால் உருவான கொலையுதிர் காலத்திற்குத் தேர்தல் காலத்தில் முற்றுப்புள்ளி வைப்பர் தமிழக மக்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






