நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை தி.மு.க. அரசு அழிக்க முயற்சிக்கிறது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை தி.மு.க. அரசு அழிக்க முயற்சிக்கிறது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x

அனைத்து வேட்டிகளையும் மறு தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் முதல் ஏழை, எளிய மக்களுக்கும், முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கும், விலையில்லா வேட்டி, சேலை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் தரமான நூல் வழங்கி, நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் வேட்டி மற்றும் சேலைகளைத் தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு வழங்கப்பட்டு வந்த விலையில்லா வேட்டி மற்றும் சேலை ஏப்ரல், மே மாதங்களில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் நிர்வாகத் திறமையற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை. மேலும், 50 சதவீதத்திற்கும் மேல் வேட்டி மற்றும் சேலைகள் வெளி மாநிலங்களில் இருந்து முறைகேடாக வாங்கப்படுவதால், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்து அவதியுறும் நிலைக்கு இந்த தி.மு.க. அரசு தள்ளியது.

தமிழகத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களை முழுமையாக முடக்கும் எண்ணத்துடன், தரமற்ற நூலை வழங்கி அவர்கள் மீதே பழிபோடும் முயற்சியில் தி.மு.க. அரசின் கைத்தறித் துறை ஈடுபட்டு வருவதாக இந்த அரசின் மீது நெசவுத் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தி.மு.க. அரசு 2026 ஆம் ஆண்டு விலையில்லா வேட்டி நெய்வதற்கு கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து தரமற்ற பாவு நூலை வழங்கியதாக கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு விநியோகித்த தரமற்ற நூலில் வேட்டி, சேலை நெய்யும் கூட்டுறவு சங்கங்களின் மீது இந்த அரசே பழியைப் போடும் அவலத்தை கைத்தறித் துறை அரங்கேற்றி வருகிறது. தரமற்ற நூல்களை அரசே தந்துவிட்டு, இதற்கு சங்கங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவாறு, வரலாறு காணாத வகையில் கைத்தறியில் 4 லட்சம் வேட்டிகளிலும், விசைத்தறியில் 13 லட்சம் வேட்டிகளிலும் நூலின் தன்மை மாறியுள்ளது என்று கூறி சங்கங்களுக்கே அவைகளை திருப்பி அனுப்புவதற்கு இந்த தி.மு.க. அரசு உத்தரவிட்டிருக்கிறது. தரம் குறைந்த நூலை விநியோகித்ததே கைத்தறித் துறைதான் என்பதையும், இதில் நடைபெற்ற ஊழலையும் மறைத்து, கூட்டுறவு சங்கங்கள் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கும் திரு. ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 ஆயிரம் வேட்டிகளுக்கு இருபது வேட்டிகளை மட்டும் மாதிரியாக எடுத்து, தர சோதனை செய்துள்ளதாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுபோன்ற அரசின் மோசடி வேலை கண்டனத்திற்குரியதாகும். இந்த அளவுக்கு வேட்டிகளை, ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சங்கங்களுக்கு திருப்பி அனுப்புவதால், அனைத்து சங்கங்களும் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருப்பது மட்டுமல்ல, தொடர்ந்து இயங்காமல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் சூழ்நிலையை நிர்வாகத் திறனற்ற இந்த தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சங்கங்களின் நலன் கருதி மீண்டும் ஒருமுறை அனைத்து வேட்டிகளையும் மறு தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். தொடர்ந்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் முயற்சியில் இந்த பொம்மை முதல்-அமைச்சரின் அரசு ஈடுபடுமேயானால், 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசுக்கு தக்க பதிலடி தருவார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story