'கம்யூனிஸ்டு கட்சிகளை தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது' - எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளன என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தென்காசி,
'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பயணத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ேமற்கொண்டு வருகிறார். அவர் தினமும் 3 சட்டமன்ற தொகுதிகள் என சிறப்பு பஸ்சில் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் தென்காசிக்கு வந்தார். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், ெதாண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
"தி.மு.க. ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. புதுப்புது பெயர் வைத்து, அதோடு திட்டத்தை கைவிடும் கட்சி தி.மு.க. தான். உங்களுடன் ஸ்டாலின் என்று அரசு அதிகாரிகள் வீடுவீடாக வருகிறார்கள். 46 பிரச்சினைகள் இருக்கிறது என்கிறார்கள். இன்னும் 7 மாதங்களே உள்ளது.
46 பிரச்சினைகள் இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இத்தனை ஆண்டுகளாக தீர்த்துவைக்கவில்லை. மோசடி என்றால் தி.மு.க., தி.மு.க. என்றால் மோசடி. ஆகவே மக்கள் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு ஏகோபித்த அளவுக்கு இருக்கிறது. தி.மு.க.வின் உருட்டுகளும், திருட்டுகளும் இனி எடுபடாது.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அம்பையில் தொகுதியில் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளன. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
மக்கள் பிரச்சினைகளுக்காக போராடினால் தான் மக்கள் செல்வாக்கு இருக்கும். மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை. ஏனெனில் அடுத்தமுறை சீட் கிடைக்காது. கூட்டணியில் இருந்து கழட்டி விடுவார்கள். அந்த பயத்தில்தான் மவுனம் காக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது' என்றார்.






