கிருஷ்ணகிரியில் இன்று பிரசாரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி


கிருஷ்ணகிரியில் இன்று பிரசாரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி
x

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கிருஷ்ணகிரி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது 3-ம் கட்ட சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். அதன்படி சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு புறப்படும் அவர் தர்மபுரி, ஓசூர் பை பாஸ் சாலை வழியாக ராயக்கோட்டைக்கு வருகிறார்.

முன்னதாக அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள். மாலை 4 மணிக்கு வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பேசுகிறார். தொடர்ந்து கெலமங்கலம் பேரூராட்சிக்கு செல்லும் அவருக்கு மாலை 5.30 மணியளவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டையில் பழைய பஸ் நிலைய மணிக்கூண்டு அருகில் பேசுகிறார்.

தொடர்ந்து ஓசூருக்கு செல்லும் அவருக்கு மத்திகிரி கூட்டு ரோடு அருகில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் இரவு 7.30 மணி அளவில் ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓசூர் ராம் நகரில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் ராயக்கோடடை சாலை, ஓசூர் எம்.ஜி.ஆர். சிலை வழியாக வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரிக்கு செல்கிறார். அங்கு இரவு 8.40 மணி அளவில் சூளகிரி ரவுண்டானா அருகில் பேசுகிறார். இதைத்தொடர்ந்து இரவு ஓசூரில் தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை ஓசூர் நகரில் நடைபயிற்சி மேற்கொள்ளும் அவர், பின்னர் அங்கு மலை மீதுள்ள சந்திர சூடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து ஓசூர் மாநகராட்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அதை தொடர்ந்து தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அவர், விவசாயிகளுடனும், வணிகர்களுடனும் கலந்துரையாடுகிறார்.

மாலை 3.20 மணி அளவில் ஓசூரில் இருந்து புறப்படும் அவர் கிருஷ்ணகிரி வருகிறார். அவருக்கு சுங்கச்சாவடி அருகில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முதல் ரவுண்டானா வரை ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் பேசுகிறார்.

பின்னர் பர்கூர் சட்டசபை தொகுதிக்கு செல்லும் அவருக்கு பர்கூர் பேரூராட்சியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் வரையில் ரோடு ஷோ நடத்தும் அவர் மாலை 6.20 மணி அளவில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பேசுகிறார்.

இதன் பின்னர் ஜெகதேவி, மத்தூர் வழியாக ஊத்தங்கரை சென்றடைகிறார். அங்கு பேரூர் கிளை சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊத்தங்கரை ரவுண்டானா அருகில் இரவு 8.20 மணி அளவில் பேசுகிறார். இதைத்தொடர்ந்து ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூருக்கு புறப்பட்டு செல்கிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்திட கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

1 More update

Next Story